×

மதுரை ஆதீனம் உடல் அடக்கம்

மதுரை: மதுரை ஆதீனத்தின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (77), உடல்நலக்குறைவு காரணமாக மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு காலமானார். மதுரை ஆதீன மடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அனைத்து சமுதாய முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை ஆதீனம் மறைவை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் சார்பில் பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து, பூமாலையுடன் யானை, பசு முன் செல்ல மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று, ஆதீனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை 3.15 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கியது. ஆதீன மடத்தில் இருந்து அவரது உடல், படகு போன்ற அலங்கரித்த பூப்பல்லக்கில் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு முனிச்சாலையில் உள்ள ஆதீனத்துக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவை தொடர்ந்து, 293வது புதிய ஆதீனமாக சுந்தரமூர்த்தி மூத்த தம்பிரான் சாமி நியமிக்கப்பட உள்ளார். இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். தற்போது ஆதீனத்திற்கு பிறகு பொறுப்பேற்கும் இவருக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பராமாச்சாரிய சாமி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மடாதிபதி நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகம் நேற்று நடத்தப்பட்டது. இதனை தருமபுர ஆதீனம் நடத்தி வைத்தார்.

தொடர்ந்து மதுரை ஆதீனத்திற்கு, தருமபுர ஆதீனம் தீட்ஷை வழங்கும் நிகழ்வும் நடந்தது. நியமன சம்பிரதாயங்கள் முடிவுற்ற நிலையில், 10 நாட்கள் தொடர்ந்து குருபூஜை நடத்தப்பட்டு, ‘‘பீடோகரணம்’’ எனும் பீடத்தில் அமரும் நிகழ்வும் நடத்தப்படுகிறது. இதன்பிறகே, 293வது மதுரை ஆதீனமாக இளைய சன்னிதானம், மதுரை ஆதீனம் பொறுப்புகளை பெற்று, மடத்தின் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மதுரை ஆதீனத்தின் சொத்து மதிப்பு ரூ.1,300 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Madurai Aadeenam , Burial of the body of Madurai Aadeenam
× RELATED தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள,...